சிவகங்கை மாவட்டத்தில் காட்டிற்குள் உள்ள மருத்துவமனை


     சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே உள்ள அமராவதிபுதூர் காச நோய் மருத்துவமனை நோயாளிகள் எளிதில் அணுக முடியாத நிலையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுகுறித்து இனி விரிவாகப் பார்க்கலாம்.
காட்டிற்குள் மருத்துவமனை:
மருத்துவமனைக்கு செல்வது ஒரு திகில் அனுபவம்... இது தேவக்கோட்டை அருகே உள்ள அமராவதிபுதூர் காச நோய் மருத்துவமனைக்கு செல்வோர் கூறும் வார்த்தைகள்... ஆங்கிலேய காலத்தில் கட்டப்பட்ட இந்த காச நோய் மருத்துவமனை எந்த ஒரு பராமரிப்பின்றி இருப்பதாக புகார் கூறுகின்றனர் அப்பகுதியின்ர். ஊரிலிருந்து சுமார் 2 கி.மீ காட்டுப்பகுதியின் உள்ளே சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை இருப்பதாகவும், ஆனால் அதற்கு ஏதுவாக சரியான சாலை வசதிகள் இன்றி, பெயர்ந்து போன வழிதடத்தில் நடந்து கூட செல்ல முடியாத சூழல் இருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த மருத்துவமனைக்கு பேருந்து போக்குவரத்து இல்லாத காரணத்தினால், ஆட்டோவை நாடும் மக்களுக்கு அதிக வாடகை கூடுதல் வேதனை என்கின்றனர், இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள்... மேலும் இருள் சூழ்ந்த நேரங்களில் பெண்கள் அவ்வழியே சென்று வர அச்சப்படுகின்றனர். மேலும் சரியான மின் வசதி இல்லை என்றும், இருளில் பணிபுரிவதால் பல சிரமங்கள் ஏற்படுவதாகவும் மருத்துவமனை ஊழியர்கள் கூறுகின்றனர்.
காச நோய் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் குறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜாராமனின் கவனத்திற்கு கொண்டு சென்றது புதிய தலைமுறை. உடனடியாக மருத்துவமனை அதிகாரிகளை தொடர்பு கொண்ட அவர், தேவையான வசதிகளையும் கேட்டறிந்தார். ஆட்சியரின் ஆர்வத்திற்கு அதிகாரிகள் செயல் வடிவம் கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
                     -இணைய செய்தியாளர் - வெங்கடேஸ்